மெரீனாவில் பானிபூரி சாப்பிட்ட இளம்பெண் பறக்கும் ரயிலில் பலி..! மயங்கி விழுந்து உயிரிழந்தார்

0 5358

சென்னை மெரீனாவில் பானிபூரி சாப்பிட்டுவிட்டு நண்பர்களுடன் பறக்கும் ரெயிலில் பயணித்த இளம்பெண் மயங்கி விழுந்து பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி நோக்கிச் சென்ற பறக்கும் ரெயில் திருவல்லிக்கேணி வந்தபோது, தோழிகள் மற்றும் நண்பர்களுடன் 24 வயதுள்ள மோனிஷா என்ற இளம்பெண் ரெயிலில் ஏறி உள்ளார்

ரெயில் மயிலாப்பூர் ரெயில் நிலையம் வந்த போது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த மோனிஷா திடீரென மயங்கி விழுந்தார்.

அவருடன் வந்திருந்த தோழிகளில் ஒருவர் நர்சு என்பதால் உடனடியாக முதலுதவி மேற்கொண்டும் பயனில்லாததால், அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மோனிஷா உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த திருவான்மியூர் ரெயில்வே போலீசார், மோனிஷாவுடன் வந்திருந்த தோழிகளிடம் விசாரித்தனர்.

தங்களுடன் மெரீனா பீச்சுக்கு வந்த மோனிஷா, அங்குள்ள கடை ஒன்றில் பானிபூரி, சுண்டல் வாங்கிச் சாப்பிட்டதாகவும் அதில் இருந்தே ஒரு மாதிரி காணப்பட்டதாகவும், திருவான்மியூர் செல்ல ரெயிலில் ஏறிய சில நிமிடங்களில் மயங்கி விழுந்து பலியானதாகவும் தெரிவித்தனர்.

மோனிஷாவுடன் மெரீனாவில் பானிபூரி சாப்பிட்ட தோழிகளிடம் விசாரித்த போலீசார், உயிரிழப்புக்கு பானிபூரி காரணமா ? அல்லது வேறு ஏதாவது உடல் நலக்கோளாறு காரணமா ? என்பது பிணக்கூறாய்வுக்கு பின்னர் தான் உறுதியாகத் தெரியவரும் என்றனர்.

உயிரிழந்த மோனிஷா கடலூரைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இந்த சந்தேக மரணம் தொடர்பாக மோனிஷாவின் பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் மெரீனா கடற்கரையில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை உணவுப்பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் சுழற்சி முறையில் அவ்வப்போது சோதனை செய்து மக்களுக்கு பாதுகாப்பான உணவுகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments